முழுமையாக வற்றிய வைகை அணை- குடிநீருக்கு உகந்ததல்ல என அவசர எச்சரிக்கை
தேனி, 28 மே (ஹி.ச.) கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தால், வைகை அணை முழுமையாக வற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 20.83 அடியாக சரிந்துள்ள நிலையில், அடிமட்டத்தில் தேங்கியுள்ள தண்ணீர் குடிநீருக்
வைகை அணை


தேனி, 28 மே (ஹி.ச.)

கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தால், வைகை அணை முழுமையாக வற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் தற்போது 20.83 அடியாக சரிந்துள்ள நிலையில், அடிமட்டத்தில் தேங்கியுள்ள தண்ணீர் குடிநீருக்கு உகந்தது அல்ல என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

வைகை அணையின் மொத்த நீர் இருப்பு கொள்ளளவு தற்போது 117 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளதால், அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு கீழ் சரியும் பட்சத்தில், வைகை அணையிலிருந்து செயல்படுத்தப்படும் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வெளியேற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக மதுரை மாநகராட்சிப் பகுதிகளுக்கு நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் முழுமையாக தடைபட்டுள்ளது. இதனால் மதுரை மாநகரம், உசிலம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது அணையில் எஞ்சியுள்ள குறைந்தளவு நீரை பயன்படுத்தி தேனி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நீர் இருப்பும் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால், தேனி மாவட்டத்திலும் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வைகை அணையின் அடிமட்டத்தில் தேங்கியுள்ள தண்ணீரின் தரம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஸ்டீபன், தேனி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், “வைகை அணையின் அடிமட்டத்தில் தேங்கியுள்ள தண்ணீர் முற்றிலும் மாசடைந்து, அடர் பச்சை நிறமாக மாறியுள்ளது. பல்வேறு கட்ட சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தினாலும் தண்ணீரை முழுமையாக சுத்திகரிக்க முடியவில்லை. இதனால் தற்போது அணையில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு உகந்ததல்ல. பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்த நீரை பயன்படுத்தக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை அணையை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீரை திறந்து வைகை அணைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அதேசமயம், தற்போது தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை போதுமான அளவில் பெய்து அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டால் மட்டுமே இந்த குடிநீர் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam