வைகாசி விசாகம் - திருச்செந்தூர் கோயிலில் 4 நாட்களுக்கு ரூ.100 கட்டண தரிசனம் ரத்து
திருச்செந்தூர், 28 மே (ஜி.) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, 4 நாட்களுக்கு ரூ.100 கட்டண சீட்டு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம்
திருச்செந்தூர்


திருச்செந்தூர், 28 மே (ஜி.)

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, 4 நாட்களுக்கு ரூ.100 கட்டண சீட்டு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் விசாக திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் அவதார தினமாக கருதப்படும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவது வழக்கம்.

இந்த நிலையில், திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், அனைவரும் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மே 28 முதல் மே 31 வரை 4 நாட்களுக்கு ரூ.100 கட்டண சீட்டு மூலம் நடைபெறும் சிறப்பு தரிசன முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அனைத்து பக்தர்களும் கட்டணமில்லா பொது தரிசன வரிசை மூலமாக மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

பெரும் திரளான பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தரிசன வரிசை ஒழுங்குபடுத்துதல், குடிநீர், மருத்துவ வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P