எடப்பாடி அணியில் தொடர்வதா, விஜய் கட்சியில் இணைவதா? - ஆதரவாளர்களுடன் விஜயபாஸ்கர் தீவிர ஆலோசனை
புதுக்கோட்டை, 28 மே (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத
எடப்பாடி அணியில் தொடர்வதா, விஜய் கட்சியில் இணைவதா? - ஆதரவாளர்களுடன் விஜயபாஸ்கர் தீவிர ஆலோசனை


புதுக்கோட்டை, 28 மே (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பு, அதிமுகவின் உட்கட்சி அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான தரப்பினர், நேற்று மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ள நிலையில், விஜயபாஸ்கரின் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி அணிக்கும் விஜயபாஸ்கர் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவில் தொடர்ந்து பயணிப்பதா அல்லது நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தில் இணைவதா என்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆதரவாளர்களின் கருத்துகளை விஜயபாஸ்கர் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

இலுப்பூரில் நடைபெற்ற இந்த சந்திப்பில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் அறிவிப்பு, புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட நகர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b