Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மே (ஹி.ச.)
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிகழ்ச்சியில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.
பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், விளையாட்டு விடுதிகளில் தங்கும் மாணவர்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
காலை, மாலை என மூன்று மணி நேரம் கடினமான பயிற்சி இருந்தாலும், பள்ளிக்குச் சென்று குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். பள்ளியில் தேர்ச்சி பெற்றால் தான் கல்லூரி மற்றும் உயர்நிலை போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியும் என்றார்.
மேலும், எந்த கெட்ட பழக்கத்திற்கும் செல்லக்கூடாது. யாராவது தவறான வழிக்கு அழைத்தால், நீங்கள் அவர்களை மைதானத்திற்கு அழைக்க வேண்டும். விளையாட்டுதான் மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்து. வீட்டுக்குள் இருந்து மொபைல் பார்த்துக் கொண்டிருந்தால்தான் டென்ஷன் வரும். மைதானத்திற்கு வந்து விளையாட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து புகார் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், நான் முதல் நாளே இங்கு வந்து உணவு சாப்பிட்டு பார்த்தேன். உணவு சரியாக இல்லை. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் தரத்தில் உணவு உங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியின் போது மாணவர்கள் அமைச்சரை “சார்” என்று அழைத்தபோது, சார் என்று அழைக்க வேண்டாம், அண்ணா என்று கூப்பிடுங்கள் என்று அமைச்சர் கூறியதால் மாணவர்கள் உற்சாகமடைந்து “அண்ணா” என்று அழைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ