717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? அரசு விளக்கம் தர வேண்டும் - அன்புமணி இராமதாஸ் கேள்வி
சென்னை, 29 மே (ஹி.ச.) அன்புமணி இராமதாஸ், முதலமைச்சர் விஜய் உத்தரவிட்ட 717 டாஸ்மாக் மதுக்கடைகளில் எத்தனை கடைகள் உண்மையில் மூடப்பட்டன என்பது குறித்து தமிழக அரசு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளிய
Anbumani


Tasmac Protest


சென்னை, 29 மே (ஹி.ச.)

அன்புமணி இராமதாஸ், முதலமைச்சர் விஜய் உத்தரவிட்ட 717 டாஸ்மாக் மதுக்கடைகளில் எத்தனை கடைகள் உண்மையில் மூடப்பட்டன என்பது குறித்து தமிழக அரசு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் செயல்பட்டு வந்த 717 மதுக்கடைகளை இரு வாரங்களுக்குள் மூட முதலமைச்சர் விஜய் கடந்த மே 12-ஆம் தேதி உத்தரவிட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருந்த 186 கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 276 கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகிலிருந்த 255 கடைகள் என மொத்தம் 717 கடைகள் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும், மே 23-ஆம் தேதி வரை 436 மதுக்கடைகள் மூடப்பட்டதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்திருந்ததாகவும் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

ஆனால், முதலமைச்சர் நிர்ணயித்த இரு வார காலக்கெடு மே 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும், பல இடங்களில் இன்னும் மதுக்கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனவே, மே 26-ஆம் தேதிக்குள் உண்மையில் எத்தனை கடைகள் மூடப்பட்டன என்பதை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும், இதுவரை மூடப்படாத மதுக்கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தற்போது மூடப்படும் 717 மதுக்கடைகளும் பின்னர் வேறு பகுதிகளில் மீண்டும் திறக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ