Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 29 மே (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய
நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
விரைவில் சீரமைக்கப்படும் என்று
அதிகாரிகள் தெரிவித்ததாகவும் பொதுமக்கள் கூறினர்.
இந்த நிலையில் தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் அதிகாரிகளின் பதிலில்
அதிருப்தியடைந்த பரமேஸ்வரமங்கலம் பகுதி மக்கள் திடீரென அரக்கோணம்
காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அந்த
சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இருபுறமும் ஏராளமான வாகனங்கள்
அணிவகுத்து நின்றதால் பரபரப்பு நிலவியது.
அப்போது அவ்வழியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததை கண்டு போராட்டத்தில் ஈடுபட்ட
பொதுமக்கள் உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் வழிவிட்டு ஆம்புலன்ஸ் செல்ல
ஏற்பாடு செய்தனர். பின்னர் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam