மகனுக்கு முக்கிய அமைச்சகங்கள் கோரி பட்டியல் - ராகுல் காந்தியை சந்தித்த சித்தராமையா
பெங்களூரு , 29 மே (ஹி.ச.) கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகிய மறுநாளே முன்னாள் முதல்வர் சித்தராமையா டெல்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்தார். வியாழக்கிழமை இரவு டெல்லி சென்ற அவர், வெள்ளிக்கிழமை காலை தனது மகன் யதீந்திராவுடன் சேர்ந்
K


பெங்களூரு , 29 மே (ஹி.ச.)

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகிய மறுநாளே முன்னாள் முதல்வர் சித்தராமையா டெல்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்தார்.

வியாழக்கிழமை இரவு டெல்லி சென்ற அவர், வெள்ளிக்கிழமை காலை தனது மகன் யதீந்திராவுடன் சேர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகாஅர்ஜுன் மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார்.

அப்போது, கர்நாடக மாநிலத்திற்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்ததற்காக கட்சி மேலிடத்திற்கு சித்தராமையா நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து தாம் கர்நாடக அரசியலிலேயே செயல்பட உள்ளதாகவும் கூறினார்.

இதனிடையே, டி.கே. சிவகுமார் தலைமையில் அமைவுள்ள புதிய அமைச்சரவையில் தனது மகன் யதீந்திராவுக்கு முக்கிய அமைச்சகங்களை வழங்க வேண்டும் என்று சித்தராமையா கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கான கோரிக்கை பட்டியலையும் அவர் மேலிடத்திற்கு வழங்கியுள்ளார்.மேலும், ராஜ்யசபா மற்றும் எம்.எல்.சி. பதவிகளுக்கான சில பெயர்களையும் அவர் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவம், கல்வி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழில், நீர்வளத்துறை போன்ற முக்கிய துறைகளை தனது மகனுக்கு வழங்க வேண்டும் என அவர் கேட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சித்தராமையாவின் இந்த கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அமைச்சரவை அமைப்பில் கட்சி மேலிடம் எவ்வாறு முடிவு எடுக்கிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA