Enter your Email Address to subscribe to our newsletters

கொழிக்கோடு , 29 மே (ஹி.ச.)
கேரள மாநிலம் கொழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ரஹீம், 2006ஆம் ஆண்டு வாழ்வாதாரத்திற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றார்.
அங்கு மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு பராமரிப்பாளராக (கேர் டேக்கர்) பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், ஏற்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவத்தில் அந்த சிறுவன் உயிரிழந்தார்.
இதையடுத்து, ரஹீம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீண்டநாள் விசாரணைக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு சவுதி நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
சவுதி சட்டப்படி, பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே குற்றவாளி மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும். அதற்காக ‘தியா’ எனப்படும் க்ஷமாதனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
ரஹீமை காப்பாற்ற உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் ஒன்றிணைந்து நிதி திரட்டினர்.
அவர்களது முயற்சியால் சுமார் 15 மில்லியன் சவுதி ரியால்கள் (இந்திய மதிப்பில் ₹34 கோடி) திரட்டி, சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கும் நீதிமன்றத்திற்கும் செலுத்தப்பட்டது.
இந்த தொகை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி நீதிமன்றம் அப்துல் ரஹீமை விடுவித்தது.
அவர் இரவு சவுதியிலிருந்து புறப்பட்டு, காலை கரிப்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
பின்னர் தனது சொந்த ஊருக்கு சென்றார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயை சந்தித்த ரஹீம், அவரை கட்டித்தழுவிய போது கண்கலங்கினார்.
அந்த காட்சி அங்கு இருந்த அனைவரையும் உருக்கியது.
என் விடுதலைக்காக உதவிய உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
என் தாயை மீண்டும் சந்திக்க முடிந்தது அவர்களால்தான், என்று அவர் தெரிவித்தார்.
ரஹீம் தாய்நாட்டிற்கு திரும்பியதையடுத்து, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA