Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 29 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த 11 சட்டவிரோத கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லணை பகுதியில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த கல்குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு, தூசி மாசு, வீடுகளில் அதிர்வு, குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து கனிமவளத்துறை மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், சில கல்குவாரிகளில் விதிமீறி அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பேரில் 11 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையை வரவேற்ற கல்லணை கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும், கனிமவளத்துறை அமைச்சர் பிரபு அவர்களுக்கு நன்றி தெரிவித்து கிராமப்பகுதிகளில் பேனர்களும் வைக்கப்பட்டன.
சட்டவிரோத கல்குவாரிகள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam