மேகதாது அணை திட்டத்துக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு
தமிழ்நாடு, 29 மே (ஹி.ச.) காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை அமைக்கும் திட்டத்தை கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு எதிராக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேகதாது அணை திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்ந
தமிழ்நாடு அரசு


தமிழ்நாடு, 29 மே (ஹி.ச.)

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை அமைக்கும் திட்டத்தை கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு எதிராக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மேகதாது அணை திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரின் அளவு பாதிக்கப்படும் என்றும், டெல்டா மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளில் தாக்கம் ஏற்படலாம் என்றும் தமிழக அரசு தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில், காவிரி நதிநீர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக அரசு, மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், மேகதாது திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், பெருமளவில் மரங்கள் வெட்டப்படுவதுடன் வனவிலங்குகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறாமல் திட்டம் தொடர்பான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P