உரம் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
விழுப்புரம், 29 மே (ஹி.ச.) உர விலை உயர்வால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். உர விலையை குறைத்து விவசாயிகளை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அ
Ramadoss Vijay


விழுப்புரம், 29 மே (ஹி.ச.)

உர விலை உயர்வால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.

உர விலையை குறைத்து விவசாயிகளை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேற்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் போர் மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கத்தால் இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது விவசாயிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பொட்டாஷ் உரத்தின் விலை ரூ.1,850 இலிருந்து ரூ.2,250 ஆகவும், காம்ப்ளக்ஸ் உரத்தின் விலை ரூ.1,550 இலிருந்து ரூ.2,100 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் யூரியா, சல்பேட் உள்ளிட்ட அடிப்படை உரங்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பது உழவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே இயற்கை மாற்றங்கள், நீர் பற்றாக்குறை, தொழிலாளர் செலவு உயர்வு, மின்சார சிக்கல்கள், பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் விவசாயிகள், தற்போது உர விலை உயர்வால் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

உர விலை உயர்வால் ஒரு ஏக்கர் விவசாயத்திற்கான செலவு பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக சிறு மற்றும் குறைந்த நிலம் கொண்ட விவசாயிகள் பயிரிட தயக்கம் காட்டக்கூடும். இது எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவு, சந்தை விலை உயர்வு மற்றும் உணவுப் பாதுகாப்பு சிக்கல்களையும் உருவாக்கும் அபாயம் உள்ளது.

விவசாயம் என்பது வெறும் தொழில் மட்டுமல்ல; நாட்டின் உணவுப் பாதுகாப்பின் முதுகெலும்பாகும்.

எனவே விவசாயிகளை பாதுகாப்பது அரசின் முக்கிய கடமையாகும். அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து உடனடியாக உர விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்,உரங்களுக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும்,

கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த விலையில் உரங்கள் கிடைக்க

ஏற்பாடு செய்ய வேண்டும்,

கருப்பு சந்தை மற்றும் பதுக்கலை தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,

சிறு மற்றும் குறைந்த நிலம் கொண்ட விவசாயிகளுக்கு

சிறப்பு நிவாரண திட்டங்கள் அறிவிக்க வேண்டும்.

விவசாயிகள் பாதுகாப்பாக இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரமும் உணவுப் பாதுகாப்பும் உறுதியாக இருக்கும் என்பதை அரசுகள் உணர்ந்து, உர விலை உயர்வை குறைக்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN