Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மே (ஹி.ச)
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனகோட்டி நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி அமைச்சர் ராஜ்மோகன் வரவேற்பளித்தார்.
ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
2026-27 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 625 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றார்.
மேலும், வெற்றி பள்ளி திட்டம் தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், சுகாதாரமான கழிவறைகள் இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி உள்ளது. மாணவர்கள் விரும்பியதை படிக்கலாம்.
ஆனால் இருமொழிக் கொள்கைதான் நமது டிஎன்ஏவிலும், நமது மாணவர்களின் டிஎன்ஏவிலும் உள்ளது என்றும் அவர் கூறினார்.
பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து திட்டங்களும் முழுமையாக பயனாளர்களை சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கியதாக கூறிவிட்டு 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கியிருந்தால், எந்த தயவும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து பேசிய அவர், சட்ட ரீதியான சிக்கல்களை தவிர்த்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.
நீட் தேர்வு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,
சில பிரச்சனைகள் சட்டமன்றத்தில் தீர்க்கப்படும், சிலவை நீதிமன்றத்தில் தீர்க்கப்படும்.
நீட் போன்ற பிரச்சனைகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பாடப்புத்தகங்களிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் புகார் அளிக்க இலவச உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ