Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மே (ஹி.ச.)
பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அறிவித்துள்ள “சிங்கப்பெண்கள்” சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தேர்தல் வாக்குறுதிகளில் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், பெண்கள் பாதுகாப்பு, அவசர மீட்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு கண்காணிப்பை மேம்படுத்தும் வகையில் இந்த சிறப்பு படை உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா முதலில் கடந்த 27ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் நிர்வாக மற்றும் நிகழ்ச்சி அட்டவணை மாற்றங்கள் காரணமாக தேதி மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இன்று மாலை சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் தொடக்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டிருந்ததாகவும், பாதுகாப்பு அணிவகுப்பு, பெண் காவல்துறை அணியின் நிகழ்ச்சிகள் மற்றும் வாகன அணிவகுப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், கடைசி நேரத்தில் நிகழ்ச்சி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிர்வாக ரீதியான காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை மேலும் விரிவான செயல்திறனுடன் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தேவையான அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற பின்னர் திட்டம் முழு அளவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P