Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மே (ஹி.ச)
கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மூத்த காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிடக் கோரி, விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழ்நாடு தலைவர் பி.சொக்கலிங்கம் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு,
விசாரணையை எப்படி நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தற்போதைய விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கருத்து தெரிவித்தது.
அரசு தரப்பில், மரபணு சோதனை முடிவுகளை எதிர்நோக்கி இருக்கிறோம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு கவனத்துடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கை கூடுதல் எஸ்.பி. கண்காணித்து வருகிறார்.
குற்றம்சாட்டப்பட்ட இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை விளக்கம் அளித்தது.
சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பரவி வரும் வீடியோக்களை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ