தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபி யார் என இன்று அறிவிப்பு
தமிழ்நாடு, 29 மே (ஹி.ச.) தமிழக காவல் துறையின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
டிஜிபி


தமிழ்நாடு, 29 மே (ஹி.ச.)

தமிழக காவல் துறையின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இவர்களில் ஒருவரை தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரம் நீண்டகாலமாக கவனத்தை ஈர்த்தது. நடைமுறைப்படி, ஓய்வுக்கு முன்பாகவே தகுதி வாய்ந்த அதிகாரிகள் பட்டியலை யுபிஎஸ்சிக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், அந்த செயல்முறை தாமதமானதாக கூறப்பட்டது.

இதற்கிடையில், மூப்பு அடிப்படையில் சில மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனையில் இருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பட்டியலில் இடம்பெறாத ஜூனியர் அதிகாரி வெங்கடராமன் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக டெல்லியில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனையின் முடிவில், டிஜிபி ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்து தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பட்டியல் தமிழக அரசிடம் வந்துள்ள நிலையில், பரிந்துரைக்கப்பட்ட மூவரில் ஒருவரை புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக தமிழக அரசு இன்று அறிவிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P