Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 03 மே (ஹி.ச.)
சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளை பகிர்ந்து வரும் அட்வகேட் நெல்சன் வெளியிட்ட சமீபத்திய வீடியோ புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சொத்து தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், உடற்பயிற்சி பயிற்சியாளர் ராஜா பேரோன் மீது அனுமதி இல்லாமல் மூலிகை மருந்து விற்பனை செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை எதிர்த்து, ராஜா பேரோனும் அவரது மனைவியும் நேரடியாக கன்னியாகுமரியில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்று விளக்கம் கேட்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நிலைமை பதற்றமாக மாறியதால், நெல்சன் குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்றுவிட்டு கதவை மூடியுள்ளனர்.
இதையடுத்து வெளியே இருந்த ராஜா பேரோன், நெல்சனை குறிவைத்து மிரட்டல் வார்த்தைகள் பயன்படுத்தியதாகவும், உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
சம்பவத்தை கவனித்த அக்கம்பக்கத்தினர் தலையிட்டு சமரசம் செய்ய முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், சிலர் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ராஜா பேரோன் தனது பையில் வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுவதால் பரபரப்பு அதிகரித்தது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தொடங்கிய வாக்குவாதம் நேரடி மோதலாக மாறிய இந்த சம்பவம், அரசியல் கருத்து வேறுபாடுகள் எவ்வாறு தீவிரமடைகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ