Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 03 மே (ஹி.ச.)
கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் திருமலை முழுவதும் பக்தர்கள் வெள்ளம் காணப்பட்டது.
தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் திருப்பதிக்கு வருகை தந்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு நீண்ட வரிசை ஏற்பட்டது.
திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெர்மன் செட் கொட்டகைகள் அனைத்தும் பக்தர்களால் நிரம்பின.
மேலும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகள் முழுவதும் நிரம்பியதால், தரிசன வரிசை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாதகங்கையம்மன் கோவில் வரை நீண்டது.
தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் தொடர்ந்து குடிநீர், டீ, காபி மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கினர்.
தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய சுமார் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA