புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுக்கோட்டை, 03 மே (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 கடந்த கடந்த 23ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகளை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


புதுக்கோட்டை, 03 மே (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 கடந்த கடந்த 23ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகளை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அங்கு மூன்றெடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அருகில், சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் ஒன்று வந்துள்ளது.

இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விரைந்து சென்று மோப்ப நாய்களின் உதவியோடு அங்கு தீவிர சோதனை நடத்தினர்.

ஏற்கனவே கடந்த 10 நாட்களில் இரண்டு முறை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

அப்போது நடத்தப்பட்ட சோதனைகளில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், நாளைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b