சென்னை ரயில்வே கோட்டத்தில் 12 லெவல் கிராசிங் கேட்டுகள் அகற்றம் - போக்குவரத்து நெரிசல் குறைந்து, பாதுகாப்பு மேம்பாடு
சென்னை, 03 மே (ஹி.ச.) சென்னை ரயில்வே கோட்டத்தில் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தவும், வாகன நெரிசலை குறைக்கவும் கடந்த நிதியாண்டில் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, முக்கிய ரயில் வழித்தடங்களில் இருந்த 12 லெவல் கிராசிங் கேட்
ரயில்வே


சென்னை, 03 மே (ஹி.ச.)

சென்னை ரயில்வே கோட்டத்தில் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தவும், வாகன நெரிசலை குறைக்கவும் கடந்த நிதியாண்டில் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, முக்கிய ரயில் வழித்தடங்களில் இருந்த 12 லெவல் கிராசிங் கேட்டுகள் அகற்றப்பட்டு, அவற்றுக்கு மாற்றாக சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், மொத்தம் 7 சுரங்கப்பாதைகள், 3 மேம்பாலங்கள், ஒரு கீழ்பாலம் மற்றும் ஒரு இடத்தில் சாலைப் போக்குவரத்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, 12 லெவல் கிராசிங் கேட்டுகள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளன.

ரயில் கடப்பாதைகள் மூடப்பட்டிருந்த நேரங்களில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

தற்போது மாற்று வசதிகள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் வாகனங்களின் காத்திருப்பு நேரம் கணிசமாக குறைந்துள்ளது.

இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், லெவல் கிராசிங் கேட்டுகள் இல்லாததால் ரயில்-வாகன மோதல் அபாயம் குறைந்து, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதுகாப்பும் மேம்பட்டுள்ளது.

குறிப்பாக, மனிதப் பிழையால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க இந்த நடவடிக்கை பெரும் பலனளிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சென்னை ரயில்வே கோட்டம் தொடர்ந்து இதுபோன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் இந்த முயற்சி, நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து சீரமைப்பில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P