பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு 2026 - இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்
தமிழ்நாடு, 03 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. மாணவர்கள் ஜ
பொறியியல்


தமிழ்நாடு, 03 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

மாணவர்கள் ஜூன் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) அறிவித்துள்ளது.

இந்த கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.

மாணவர்கள் Tamil Nadu Engineering Admissions (TNEA) Portal என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் பதிவு, ஆவணங்கள் பதிவேற்றம், கட்டணச் செலுத்தல் உள்ளிட்ட அனைத்து செயல்முறைகளும் இணையவழியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

அதன் பின்னர், தரவரிசை அடிப்படையில் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தங்கள் விருப்பமான கல்லூரி மற்றும் படிப்புகளைத் தேர்வு செய்யலாம்.

கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டு சலுகைகளும் இந்த கலந்தாய்வில் வழங்கப்படுகின்றன.

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்கல்விக்கான முக்கிய வாயிலாகக் கருதப்படும் இந்த பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு, ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P