த.வெ.க வெற்றி பெறும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர், 03 மே (ஹி.ச.) 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வரும் மே 4ஆம் தேதியான நாளை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு வெளியாகவிருக்கும் நிலையில், திமுக, அதிமுக,
தவெக வெற்றிபெறும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


விருதுநகர், 03 மே (ஹி.ச.)

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

வரும் மே 4ஆம் தேதியான நாளை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு வெளியாகவிருக்கும் நிலையில், திமுக, அதிமுக, தவெக 3 கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் தவெக பெரும்பான்மை பெறலாம் என்ற கருத்துகள் இருந்துவரும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகளே தவெகவிற்கு சாதகமான கருத்துகளை பொதுவெளியில் வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெற்றிபெறும் அளவிற்கு தவெக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று பேசியுள்ளார்.

விருதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பதாவது,

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் கருத்து திணித்திருக்கிறார்கள். அதையெல்லாம் பொய்யாக்கி அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்படியார் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்பார்.

தவெக இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் வெற்றி பெறக்கூடிய அளவுக்கு தாக்கத்தை உருவாக்கவில்லை. தற்போது ஒரு தாக்கம் இருக்கிறது, ஆனால் வெற்றி பெறும் அளவுக்கு தாக்கம் இல்லாததால் அதிமுகவே வெற்றி பெறும். திமுக அடுத்த இடத்திற்கு வரும்.

2016 தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக தான் வெற்றி பெறும் என்று சொன்னார்கள்.

ஆனால் அதிமுக 137 இடங்களில் தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி பிடித்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆண்ட கட்சியை மீண்டும் ஆளும் கட்சியாக தகுதியை ஏற்படுத்தி ஆட்சி அமைத்தார். கருத்து கணிப்பு எல்லாம் வடநாட்டு பத்திரிகையாளர்கள், எங்கேயோ இருந்து எடுக்கும் சேனல்கள் எல்லாம் கணிப்புகள் எல்லாம் தவறானது. ஆறு கோடி பேர் வாக்களித்துள்ளார்கள் அனைத்து பேரையும் அவர்கள் விசாரித்தார்களா.

அது ஒரு மூன்று நாட்கள் மீடியாக்களுக்கு ஒரு தீனி. அப்படித்தான் பார்க்க வேண்டும். மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்காது. மாற்றம் என்பது மக்களிடத்திலே உருவாக்கியிருக்கிறது.

அது சத்தம் இல்லாமல் ஓட்டுக்களாக இரட்டை இலைக்கு பதிவாகி இருக்கிறது, அதிமுக-என்டிஏ கூட்டணி வெல்லும் எடப்பாடியார் முதல்வராக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b