வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல கியூ.ஆர்.கோர்டுடன் கூடிய அடையாள அட்டை - திண்டுக்கல்லில் ஏற்பாடு
திண்டுக்கல், 03 மே (ஹி.ச.) கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்துார், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்துார் என 7 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் திண்டுக்கல் முத
ID Cards with QR Codes


திண்டுக்கல், 03 மே (ஹி.ச.)

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்துார், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்துார் என 7 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் திண்டுக்கல் முத்தனம்பட்டி அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் நாளை ( மே 4) எண்ணப்படுகிறது.

தரைத்தளத்தில் திண்டுக்கல், ஆத்துார், முதல்மாடியில் வேடசந்துார், நத்தம், 2-வது மாடியில் பழநி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக ஓட்டு எண்ணும் அறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்கு 7 தொகுதிகளிலும் தலா 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. தபால் ஓட்டுகள் எண்ண தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் 500 தபால் ஓட்டுகளுக்கு ஒரு மேஜை வீதம் 15 ஆயிரத்து 117 தபால் ஓட்டுக்களை எண்ணுவதற்கு 32 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

ஒரு மேஜைக்கு மேற்பார்வையாளர், ஓட்டு எண்ணும் உதவியாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுப்பதிவு இயந்திரங்ள் பாதுகாப்பு அறையில் இருந்து ஓட்டு எண்ணும் அறைக்கு கொண்டு வர, திரும்ப எடுத்து செல்ல தனி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் அலுவலர்கள், முகவர்கள், வேட்பாளர்கள் வருவதற்கு தனி பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பாதையிலும் போலீஸ், மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகளின் தீவிர சோதனைக்கு பின்னரே அலுவலர்கள், முகவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சிறப்பு ஏற்பாடாக கியூ.ஆர்.கோர்டுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே ஓட்டு எண்ணிக்கை அறைக்குள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b