Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 03 மே (ஹி.ச.)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய வில் ஜேக்ஸ் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அதன்பின்னர் ரிக்கல்டன் மற்றும் நமன் திர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில், ரிக்கல்டன் 37 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நமன் திர் அரைசதம் அடித்து 57 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் வந்த வீரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியின் பந்து வீச்சில் கம்போஜ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாம்சன் களமிறங்கினர்.
சாம்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த உர்வில் படேல் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.
ஆனால் கஸான்பர் பந்துவீச்சில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின்னர் ருதுராஜுடன் கார்த்திக் சர்மா ஜோடி சேர்ந்தார்.
இருவரும் நிதானத்துடனும் அதிரடியுடனும் விளையாடி சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
ருதுராஜ் கெய்க்வாட் 34 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து கார்த்திக் சர்மாவும் 39 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டிய சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களுடனும், கார்த்திக் சர்மா 54 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை அணியின் பந்து வீச்சில் பும்ரா மற்றும் கஸான்பர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA