Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 03 மே (ஹி.ச.)
தமிழ்நாடு–கேரளா எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலுக்கு செல்லும் தமிழகப் பாதையை சீரமைத்து, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
சிலப்பதிகாரக் குறிப்புகளின்படி, கிபி 2ஆம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கண்ணகிக்காக கோயில் கட்டியதாக நம்பப்படுகிறது.
இந்தக் கோயில் தமிழ்நாடு–கேரளா எல்லையில், தேனி மாவட்டம் கூடலூர், புளியங்குடி பகுதிகளுக்கு அருகிலும், கேரளாவின் இடுக்கி மாவட்டத்துடன் இணையும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள வண்ணாத்திப்பாறை மலையில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பௌர்ணமி நாளில் திறக்கப்படும் இந்தக் கோயிலுக்கு சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கோயில் தமிழ்நாடு எல்லைக்குள் இருந்தாலும், அதன் பராமரிப்பை கேரள தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இதனை தமிழக இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 2022ஆம் ஆண்டு முயற்சிகள் மேற்கொண்டது.
தற்போது கோயில் நிர்வாகம் தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
குமுளி அருகே செல்லும் பாதையில் சுமார் 15 கிலோமீட்டர் மலைப்பாதையில் ஜீப் மூலம் கேரளாவின் காப்புக்காடு வழியாக பெரியாறு புலிகள் காப்பகத்தை ஒட்டி செல்வது எளிதாக இருப்பதால், பெரும்பாலான பக்தர்கள் அந்த வழியையே பயன்படுத்துகின்றனர்.
ஆனால் 1976ஆம் ஆண்டு முதல் தமிழக எல்லையான புளியங்குடி வழியாக பாதை அமைப்பதில் பல தடைகள் இருந்து வருகின்றன.
கோயிலுக்குச் செல்லும் சில பகுதிகள் கேரள மாநில கட்டுப்பாட்டில் உள்ளதால், இரு மாநில காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இதனால் பக்தர்களிடையே எல்லை தொடர்பான உணர்வு அதிகரித்து வருகிறது.
மேலும், கோயில் பகுதியில் கேரள காவல்துறையினர் பக்தர்களுக்கு தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும், அனுமதி மறுப்பு மற்றும் கெடுபிடிகள் நடைபெறுவதாகவும் தமிழக பக்தர்கள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநில மறுசீரமைப்பு சட்டத்திற்குப் பின்னரும், தேக்கடி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளை மையமாகக் கொண்டு தமிழ்நாடு–கேரளா இடையே எல்லை தொடர்பான பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.
கண்ணகி கோயில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது என பல ஆய்வுகள் சுட்டிக்காட்டினாலும், கேரள அரசு டிஜிட்டல் சர்வே அடிப்படையில் அதனை தங்களுடையதாகக் கூறி வருகிறது.
கடந்த 2025ஆம் ஆண்டு கொடி ஏற்ற உரிமை தொடர்பான சர்ச்சையால் விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், பின்னர் அதிகாரிகள் நடத்திய அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு விழா மீண்டும் நடைபெற்றது.
இந்நிலையில், காப்புக்காடு பகுதியை காரணம் காட்டி கண்ணகி கோயிலுக்குச் செல்ல தடைகள் விதிக்கும் கேரள அரசு, அதே பகுதியில் உள்ள சபரிமலைக்கு கட்டுப்பாடுகள் விதிக்காதது இரட்டை நிலைப்பாடு எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, கண்ணகி கோயிலின் உரிமையை உறுதி செய்யவும், புளியங்குடி மற்றும் லோயர் கேம்ப் வழியாக சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சீரான பாதை அமைத்து பக்தர்கள் எளிதில் சென்று தரிசனம் செய்யும் வசதி ஏற்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ