Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 03 மே (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி அடுத்த சூளாகரை அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த இயற்கை சீற்றத்தால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனலட்சுமிக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் பரப்பளவிலான வாழைத் தோட்டத்தில், அறுவடைக்குத் தயாராக இருந்த 2,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் பலத்த காற்றைத் தாங்க முடியாமல் அடியோடு முறிந்து விழுந்தன.
குலை தள்ளி, இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யத் தயாராக இருந்த வாழை மரங்கள் சேதமடைந்ததால், விவசாயிக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு ஆண்டு காலமாக கடும் உழைப்புடன் பயிரிட்டு, பெருமளவில் முதலீடு செய்திருந்த நிலையில், ஒரே இரவில் இயற்கை பேரிடரால் அனைத்தும் நாசமாகிவிட்டதாக விவசாயி தனலட்சுமியும், அவரது குடும்பத்தினரும் வேதனை தெரிவித்தனர்.
கடன் வாங்கி பயிரிட்ட பயிர் இவ்வாறு சேதமடைந்தது அவர்களை கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam