மேலூர் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் கரும்பு சாய்வு – விவசாயிகள் வேதனை
மதுரை, 03 மே (ஹி.ச.) மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் பரவலாக பெய்த மழையால், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் முறிந்து சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள்
கரும்பு


மதுரை, 03 மே (ஹி.ச.)

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் பரவலாக பெய்த மழையால், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் முறிந்து சாய்ந்துள்ளன.

இதனால் விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பையும், வாழ்வாதார பாதிப்பையும் சந்தித்துள்ளனர்.

மேலூர், கொட்டாம்பட்டி, கீழவளவு, மேலவளவு, சென்னகரம்பட்டி, அழகர்கோயில், தனியாமங்கலம், சருகுவலையப்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இந்த இயற்கை சீற்றத்தின் தாக்கம் விவசாய நிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சருகுவலையப்பட்டி, வடக்குவலையப்பட்டி, தனியாமங்கலம், நாவினிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் சந்தையை முன்னிட்டு பயிரிடப்பட்டிருந்த செங்கரும்புகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முறிந்து விழுந்தும், வேரோடு சாய்ந்தும் காணப்படுகின்றன.

அறுவடைக்கு தயாராக இருந்த இந்த கரும்புகள் சேதமடைந்ததால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.25 லட்சம் வரை செலவு செய்து பயிரிட்ட கரும்புகள், விற்பனைக்கு முன்பே சேதமடைந்துள்ளன.

சாய்ந்த கரும்புகளை மீட்டெடுக்கவும் முடியாத நிலையில், சந்தைக்கு கொண்டு செல்லவும் இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், கொட்டாம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை மரங்களும் பல இடங்களில் வேரோடு சாய்ந்துள்ளன.

மேலும், இயற்கை விவசாயி அருண் அமைத்திருந்த பண்ணை குடிலும் பலத்த காற்று மற்றும் மழையால் சேதமடைந்துள்ளது.

இந்த பாதிப்புகளை வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam