Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 03 மே (ஹி.ச.)
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.
2026-27 கல்வியாண்டுக்கான இந்த தேர்வை இதுவரை இல்லாத வகையில் சுமார் 22.80 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்த தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை,
3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறுகிறது.
தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள
5,400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு சுமுகமாக நடைபெறுவதற்காக 2 லட்சத்திற்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்காக கூடுதல் நேரம் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவர்களுக்கு மாலை 6 மணி வரை தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீட் இளநிலை தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று நீட் இளநிலை தேர்வு எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
அமைதியாகவும், கவனத்துடனும் இருந்து தேர்வை சிறப்பாக எழுதுங்கள்.
மருத்துவத் துறை என்பது இரக்கம், சேவை மனப்பான்மை மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இந்த உயரிய பாதையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு மாணவரும் தெளிவும் நம்பிக்கையும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA