Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 03 மே (ஹி.ச.)
கரூர் மாவட்டத்தில் கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக வைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அறைகளுக்கு மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படை, ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு போலீசார் என, 4 அடுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில், இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை, 24 மணி நேரமும் கண்காணிக்க உயர் நிலையிலான அலுவலர்களை ஒருங்கிணைத்து, கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை (மே, 4) ஒட்டு எண்ணிக்கை காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகளை எண்ண துவங்குவர்.
தபால் ஓட்டுகளை எண்ண அவற்றின் பதிவுக்கு ஏற்ப மேஜைகள் அமைக்கப்படும்.
அதன் பின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவானவற்றை எண்ணுவர். இதற்காக மையத்தில், 14 மேஜைகள் போடப்பட்டு இருக்கும். இதனடிப்படையில் மாவட்டத்தில் கரூர் தொகுதிக்கு, 21 ரவுண்டுகள் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.
அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளில் தலா, 20 ரவுண்டுகள் ஓட்டு எண்ணப்படும்.
ஓட்டு எண்ணிக்கையின் போது ஒரு மேஜையில் தலா ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், மைக்ரோ அப்சர்வர், வீடியோகிராபர் இருப்பர்.
அவர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் காட்டும் ஓட்டுப்பதிவு எண்ணிக்கையை, தடுப்பு வலையை அடுத்து நிற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் காட்டுவர் ஒவ்வொரு சுற்றிலும் இயந்திரத்தில் உள்ள படி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளை குறித்து கொண்டதும் சீல் வைத்து விடுவர்.
மேலும், ஓட்டு எண்ணிக்கை மையங்களில் எவ்வித இடையூறும் இன்றி, திறமையாகவும் வெளிப்படையாகவும் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b