Enter your Email Address to subscribe to our newsletters

திருக்கடையூர், 03 மே (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கடையூரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான என்.ஆனந்த் இன்று காலை குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
பக்தர்கள் அதிகம் வருகை தரும் இக்கோயிலில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டியும், மக்கள் பணி சிறக்க வேண்டியும் அவர் பிரார்த்தனை செய்தார்.
அபிராமி அம்மன் மற்றும் அமிர்தகடேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வழிபட்ட அவர், கோயில் பிரகாரத்தையும் வலம் வந்தார்.
வழிபாடு நிறைவடைந்ததும், கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் அவருக்கு பட்டு சால்வை அணிவித்தும், மலர் மாலை சூட்டியும், கோயில் பிரசாதங்கள் வழங்கியும் முறைப்படி மரியாதை செலுத்தினர்.
அப்போது கோயிலில் தரிசனத்திற்காக வந்திருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள், அவரை சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்தனர்.
பலரும் ஆர்வத்துடன் அவருடன் செல்ஃபி எடுத்தும், குழு புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அவரும் புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
திருக்கடையூர் கோயில், எம பயம் நீக்கும் தலமாகவும், ஆயுள் விருத்தி தரும் தலமாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது.
அரசியல் பிரமுகர்கள் தேர்தல் சமயங்களில் இங்கு வந்து வழிபடுவது வழக்கமான ஒன்றாகும்.
Hindusthan Samachar / vidya.b