கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏற்காடு, 03 மே (ஹி.ச.) ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். தமிழகத்தின
S


ஏற்காடு, 03 மே (ஹி.ச.)

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் ஏராளமானோர் ஏற்காட்டுக்கு வந்தனர்.

குறிப்பாக ஏற்காடு ஏரியில் உள்ள படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

அண்ணா பூங்காவில் மலர் செடிகள் மற்றும் பசுமை புல்வெளிகளின் நடுவே குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட காட்சிமுனைகளில் இருந்து மலைகளின் இயற்கை அழகையும், சேலம் மாநகரின் தோற்றத்தையும் கண்டு ரசித்தனர்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் ஏற்காட்டில் இதமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் சுற்றுலா பயணிகளின் வாகன வருகை அதிகரித்ததால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 20 கொண்டை ஊசி வளைவுகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சேலம் முதல் ஏற்காடு மலைப்பாதை வரை வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக சென்றன.

இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வாகனங்களை ஒழுங்குபடுத்தினர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

இதனால் உணவகங்கள், சாலையோர கடைகள் மற்றும் பழ வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் காபி, மிளகு, ஏலக்காய் மற்றும் கைவினைப் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA