திருப்பரங்குன்றம் அருகே இரட்டைக்கொலை - ஒருவர் அடையாளம் தெரியாததால் போலீசார் குழப்பம்
மதுரை, 03 மே (ஹி.ச.) மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பக்குளம் விலக்கு அருகே கப்பலூர் - மதுரை சுற்றுச்சாலையில் நடுரோட்டில் இறந்த நிலையில் ஆணின் உடல் கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் அதிகாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Double Killing


மதுரை, 03 மே (ஹி.ச.)

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பக்குளம் விலக்கு அருகே கப்பலூர் - மதுரை சுற்றுச்சாலையில் நடுரோட்டில் இறந்த நிலையில் ஆணின் உடல் கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் அதிகாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் நடுரோட்டில் இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர் விபத்தாக இருக்கலாம் என்று ஆய்வு செய்த நிலையில் இறந்து கிடந்தவர் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பதும் உடலில் வெட்டுக் காயங்கள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், மர்ம நபர்கள் யாரோ கொலை செய்து நடுரோட்டில் போட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

ஆசியம்பட்டி போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அய்யங்கோட்டை சேர்ந்த குமார் என்பவரின் மகன் (வயது 28) என தெரிய வந்தது.

தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இதே போல் காலை நிலையூர் - சம்பக்குளம் சாலையில் வண்ணான் பாறை அருகே இறந்த நிலையில் ஆண் உடல் கிடப்பதைக்கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஏ எஸ் பி அன்சுல் நாகர் தலைமையிலான ஆஸ்டின் பட்டி போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு இறந்தவரும் முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பதும் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. மேலும் கொலையாளிகள் இறந்தவர் முகத்தை அடையாளம் தெரியாதவாறு சிதைத்திருந்ததால் இறந்தவர் யார் என தெரியவில்லை.

இதையடுத்து அப்பகுதி மக்களிடம் இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது யாருக்கும் அடையாளம் தெரியவில்லை இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை செய்தனர்.

பின்னர் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்த ஆஸ்டின்பட்டி போலீசார் இறந்தவர்கள் இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும், அவர்கள் இருவரையும் யார் எதற்காக கொலை செய்தனர் ? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவரை அடையாளம் தெரியாத அளவுக்கு முகத்தை சிதைத்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், மற்றொருவரை கொலை செய்து வீசி சென்ற சம்பவமும் நிலையூர் மற்றும்சம்பக்குளம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN