பல்லடத்தில் சூறைக்காற்றில் கிழிந்த விளம்பர பேனர் - இருசக்கர வாகன ஓட்டி கீழே விழுந்து பரபரப்பு
திருப்பூர், 03 மே (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்று மாலை வீசிய கடுமையான சூறைக்காற்றால் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தனியார் விளம்பர பேனர் கிழிந்து, சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை
சூறைக்காற்று


திருப்பூர், 03 மே (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்று மாலை வீசிய கடுமையான சூறைக்காற்றால் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தனியார் விளம்பர பேனர் கிழிந்து, சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த லட்சுமி மில்ஸ் அருகே, கோவையிலிருந்து பல்லடம் நோக்கிச் செல்லும் சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

அப்பகுதியில் மாலை நேரத்தில் திடீரென பலத்த காற்று வீசியது.

இதன் காரணமாக, சாலையோரத்தில் நிறுவப்பட்டிருந்த பெரிய அளவிலான தனியார் விளம்பர பேனர் தாங்காமல் கிழிந்து சாலையில் சரிந்தது.

அந்த நேரத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஓட்டியின் முன்பாக பேனர் திடீரென விழுந்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவர் வாகனத்துடன் கீழே விழுந்தார்.

இந்த காட்சி அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் பொதுமக்கள் செல்போன்களில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதிர்ஷ்டவசமாக, வாகன ஓட்டிக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவம் அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாலையோரங்களில் விதிமுறைகளை மீறி அல்லது போதிய பாதுகாப்பின்றி அமைக்கப்படும் விளம்பர பேனர்கள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை மணி என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, மழைக்காலம் மற்றும் சூறைக்காற்று வீசும் காலங்களில் இத்தகைய பேனர்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, சாலையோர விளம்பர பலகைகளின் நிலைத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P