Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 03 மே (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருநின்றவூர் பெரியார் நகர், மசூதி தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் – ஜெஸி தம்பதியரில், ஜெஸி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரை திருநின்றவூர் ராமர் கோவில் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.
அங்கு பணி மருத்துவர் நேரில் இல்லாத நிலையில், நர்ஸ் மற்றும் தூய்மை பணியாளரான ஆயம்மா ஆகியோர் ஜெஸிக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், மருத்துவர் செல்போனில் வீடியோ கால் மூலம் வழிகாட்டியதன் அடிப்படையில் பிரசவம் நடத்தப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
பிரசவத்தின் போது குழந்தைக்கு தொப்புள் கொடி சுற்றியிருந்ததாகவும், இதனால் குழந்தை உயிரிழந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவர் நேரில் இல்லாமல், தகுதியற்ற பணியாளர்கள் மூலம் பிரசவம் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, அலட்சியத்திற்கு காரணமானோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், உறவினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
திருநின்றவூர் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam