Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 30 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் “டிஜிட்டல் அரெஸ்ட்” என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் சைபர் குற்றங்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அறிக்கையில் அறிவித்துள்ளார்.
செயலகத்தில் நடைபெற்ற சைபர் குற்ற தடுப்பு உயர் நிலை ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர்,
புகார் கிடைத்தவுடன் உடனடியாக ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் பணம் திருடப்படாமல் தடுக்க ‘கோல்டன் அவர்’ நேரத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதற்காக மாநிலத்தில் ‘ஏபி சைபர் கார்ட்’ என்ற புதிய ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்படுவதாகவும், மங்களகிரியில் 30 நாட்களில் மாநில அளவிலான சைபர் போர் அறை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த அமைப்பில் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, போலீசாருக்கு பயிற்சி, 3 அடுக்கு அமைப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு உள்ளிட்டவை இடம்பெறும்.
மேலும், வங்கி அமைப்புகளுடன் இணைந்து பண மோசடி பரிவர்த்தனைகளை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், MuleHunter.AI போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
28 மாவட்டங்களில் சைபர் பிரிவுகள் மற்றும் 4 பிராந்திய மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இதேபோல் மாநிலத்தில் நடைபெறும் அனைத்து அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கும் காலக்கெடு நிர்ணயித்து விரைவாக முடிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார்.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், மீன்பிடி துறைமுகங்கள் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை அவர் ஆய்வு செய்தார்.
ஆந்திராவை சைபர் குற்றமற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும், குற்றம் செய்தால் தப்பிக்க முடியாது என்ற பயம் குற்றவாளிகளுக்கு ஏற்பட வேண்டும் எனவும் முதல்வர் சந்திரபாபு வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA