Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மே (ஹி.ச.)
தமிழக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவு நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட தலைமைச் செயலகத்தின் அனைத்து துறை ஊழியர்களும் இனி கைரேகை அல்லது முக அங்கீகாரம் மூலம் தங்களது வருகையைப் பதிவு செய்ய வேண்டும். இந்த புதிய நடைமுறை வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் கட்டாயமாக அமலுக்கு வருகிறது.
அரசு அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை மற்றும் பணி நேரத்தை துல்லியமாக கண்காணிக்கவும், நிர்வாக வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை கையெழுத்து மூலம் மேற்கொள்ளப்பட்ட வருகைப் பதிவு முறைக்கு பதிலாக, தொழில்நுட்பம் சார்ந்த பயோமெட்ரிக் கருவிகள் அனைத்து தளங்களிலும் நிறுவப்பட்டுள்ளன.
மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அலுவலக நேரத்திற்கு சரியாக வருகை தருவதை உறுதி செய்வதும், பணியாளர் மேலாண்மையை டிஜிட்டல் மயமாக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் பயோமெட்ரிக் கருவியில் வருகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தாமதமாக வருதல் மற்றும் முன்கூட்டியே செல்லுதல் போன்றவை இனி தானியங்கி முறையில் பதிவாகும். இதனால் விடுப்பு மற்றும் ஊதியம் கணக்கிடும் முறையிலும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமைச் செயலக வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b