Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 30 மே (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நரிக்குறவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு விபரீதமாக மாறிய நிலையில், தாயை கத்தியால் தாக்கிய மகனை ஆத்திரத்தில் தந்தை நாட்டு துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த சேகர் (52), மாலா (50) தம்பதியரின் மகன் கேப்டன் பிரபாகரன் (25). நேற்று மாலை குடும்பப் பிரச்சினை தொடர்பாக தாய்-மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மதுபோதையில் இருந்த கேப்டன் பிரபாகரன், ஆத்திரத்தில் தனது தாயார் மாலாவை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதில் மாலாவின் இடது கை மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த தந்தை சேகர், இன்று அதிகாலை வீட்டில் மகனிடம், “ஏன் தாயை தாக்கினாய்?” என்று கேட்டபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், வீட்டில் வைத்திருந்த கொக்கு சுடும் நாட்டு துப்பாக்கியை எடுத்த சேகர், மகனை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் கேப்டன் பிரபாகரனின் இரு கால்களிலும் முழங்காலுக்கு கீழ் காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாமல்லபுரம் போலீசார், காயமடைந்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து மகனை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் சேகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நாட்டு துப்பாக்கி எவ்வாறு வைத்திருந்தார், அதற்கு உரிய அனுமதி இருந்ததா உள்ளிட்ட கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாய் மீது கத்தித் தாக்குதல், அதற்கு பழிவாங்கும் வகையில் தந்தை நடத்திய துப்பாக்கிச் சூடு என அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் மாமல்லபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam