Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மே (ஹி.ச.)
சென்னையில் கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான நடைமுறைகளை விரைவுபடுத்தும் வகையில், விண்ணப்பங்கள் மீது 27 நாட்களுக்குள் இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கட்டுமான திட்ட அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் உதவி செயற்பொறியாளர்கள் கள ஆய்வை நிறைவு செய்ய வேண்டும். கள ஆய்வு முடிந்த 2 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை ஆய்வு செய்யும் பணிகளை அடுத்த 5 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். தேவையான கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, ஆன்லைன் மூலமாக மட்டும் ஆவணங்களை பெற 2 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் கூடுதல் விளக்கம் அல்லது ஆவணங்களை சமர்ப்பிக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். பின்னர் ஆன்லைன் கட்டண வசூல் உள்ளிட்ட பணிகளுக்கு 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இறுதியாக, ஒரு நாளுக்குள் டிஜிட்டல் முறையில் கட்டட அனுமதி வரைபடத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
இந்த நடைமுறைகளின் அடிப்படையில், முழுமையான ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு 18 நாட்களுக்குள்ளும், பிற விண்ணப்பங்களுக்கு அதிகபட்சம் 27 நாட்களுக்குள்ளும் கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சி.எம்.டி.ஏ. ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள திட்டங்களுக்கு, கட்டுமானப் பணி உரிமத்தை 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், இந்த நடைமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் சமீரன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam