Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 30 மே (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக டிகே சிவகுமார் ஜூன் 3ஆம் தேதி பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
முன்னாள் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய முதல்வர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை பெங்களூருவில் நடைபெறவுள்ளதாகவும், இதில் சட்டமன்றக் கட்சி தலைவர் (CLP) தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் டிகே சிவகுமார் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை அமைப்பு மற்றும் பதவியேற்பு விழா குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
மேலும், ஜூன் 3ஆம் தேதியை தனது ஜாதக ஆலோசகரின் பரிந்துரைப்படி தேர்வு செய்ததாகவும், அதே நாளில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், அமைச்சரவை சமநிலையை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆளுநர் தவார் சந்த் கெலாட் அவர்களுடன் புதிய அரசியல் நிலைமை குறித்து சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டிகே சிவகுமார் ஜூன் 3ஆம் தேதி பதவியேற்பார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே இது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA