சென்னையில் வீடு ஒதுக்கீடு கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
சென்னை, 30 மே (ஹி.ச.) சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக வாரியத்தால் அறிவிக்கப்பட்டபடி, இப்பகுதியில் வசித
சென்னையில் வீடு ஒதுக்கீடு கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்


சென்னை, 30 மே (ஹி.ச.)

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக வாரியத்தால் அறிவிக்கப்பட்டபடி,

இப்பகுதியில் வசித்து வந்த குடும்பங்களுக்கு மறுவாழ்வு அடிப்படையில் புதிய வீடுகள் ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது வரை வீடுகள் ஒதுக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக, அப்பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள 195 வீடுகளை உடனடியாக பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

வீடுகள் தயாராக இருந்தும் மாதக்கணக்கில் ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்வதால் தாங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வாரிய அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b