Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 30 மே (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் டாஸ்மாக் மதுபானக் கடை முன்பு ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது, பின்னர் அரசு மருத்துவமனை வரை நீண்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாலாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார், நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தை டாஸ்மாக் கடை முன்பு நிறுத்திவிட்டு மதுபானம் வாங்கச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வாகனம் கீழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அருகில் நின்றிருந்த திருத்துறைப்பூண்டி குட் ஷெட் சாலையைச் சேர்ந்த சிவாவிடம் இதுகுறித்து கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தகராறை சமரசப்படுத்த முயன்ற நாலாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் மீது, சிவா கையில் இருந்த மதுபான பாட்டிலை உடைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பிரபாகரின் தலையில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த பிரபாகர் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், கையில் காயமடைந்திருந்த சிவாவும் அங்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
அப்போது மருத்துவமனையின் நோயாளிகள் பதிவு சீட்டு வழங்கும் பகுதியில் இருதரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுக்க முயன்ற போதிலும், இருதரப்பினரும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பின்னர் இருதரப்பினரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam