திருப்பரங்குன்றத்தில் பள்ளி, கோயில், அரசு மருத்துவமனை அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
மதுரை, 30 மே (ஹி.ச.) மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பள்ளி, கோயில், ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு மிக அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 5556-ஐ உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள
டாஸ்மாக்


மதுரை, 30 மே (ஹி.ச.)

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பள்ளி, கோயில், ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு மிக அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 5556-ஐ உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் பகுதியில் செயல்பட்டு வந்த மூன்று டாஸ்மாக் கடைகளில், தமிழக அரசின் உத்தரவின்படி இரண்டு கடைகள் மூடப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடை எண் 5556 மட்டும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்டபோது,

இந்தக் கடையை மூடுவதற்கான உத்தரவு இதுவரை வரவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தக் கடை அருகில் திருப்பரங்குன்றம் காவல் நிலையம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளதுடன், கோயிலுக்குச் சொந்தமான ஸ்ரீ ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

பள்ளி மாணவிகள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து பள்ளிக்குச் செல்லும் நிலையில், டாஸ்மாக் கடையை கடந்து செல்ல வேண்டிய சூழல் இருப்பதாகவும், இதனால் சிரமம் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், சிலர் பாருக்குள் சென்று மது அருந்தாமல் கடையின் வெளியே நின்று மது அருந்துவதாலும், அநாகரிகமாக நடந்து கொள்வதாலும் மாணவிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பள்ளி மாணவிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளி மற்றும் கோயில் உள்ளிட்ட முக்கிய பொது இடங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 5556-ஐ உடனடியாக அகற்ற தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam