Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பரங்குன்றம், 30 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இயங்கி வந்த மூன்று டாஸ்மாக் கடைகளை தமிழக அரசின் உத்தரவின்படி ஏற்கனவே மூடியிருந்தனர்.
ஆனால், 5556 எண் கொண்ட ஒரு டாஸ்மாக் கடை மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டது.
இந்த கடை, திருப்பரங்குன்றம் காவல் நிலையம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பள்ளி, கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மிக அருகில், சுமார் 50 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான ஸ்ரீ ஆண்டவர் சுப்பிரமணியசுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இந்த மதுபான கடையை கடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்ததாகவும், குடிமக்கள் பாருக்குள் செல்லாமல் வெளிப்புறத்தில் மது அருந்தி தொந்தரவு ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் டாஸ்மார்க் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, தமிழக அரசு அந்த மதுபான கடையை மூடியுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P