Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 30 மே (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல், செங்கல் சூளை மேஸ்திரியை அவரது மகள் கண் முன்னே சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி,
சேங்காளிபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் (48) செங்கல் சூளையில் மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனது மனைவி சுதா, மகன் சுமன் மற்றும் மகள் தியாஸினுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டின் வெளிக்கதவு தட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
திருமுருகன் வீட்டின் உள்கதவைத் திறந்து வெளியே வர முயன்றபோது, வெளிக்கதவை உடைத்துக்கொண்டு மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளது.
சுதாரிப்பதற்குள் திருமுருகனை சரமாரியாக தாக்கிய கும்பல், அவரை காப்பாற்ற முயன்ற மனைவி சுதாவையும் வெட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், தந்தையை காப்பாற்ற முயன்ற மகன் சுமனும் தாக்கப்பட்டதில் மயக்கமடைந்துள்ளார்.
அதேசமயம், மகள் தியாஸினின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய மர்மநபர்கள், சத்தம் போடக்கூடாது என எச்சரித்து, அவரது கண் முன்னே திருமுருகனை கொடூரமாக வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலத்த காயமடைந்த திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலுக்குப் பிறகு கும்பல் மூன்று இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குடவாசல் போலீசார், திருமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த சுதா, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கொலை முன்விரோதம், தொழில் போட்டி அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நடைபெற்றதா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாலை நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து, குடும்பத்தினர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரக் கொலை சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam