முருகப்பெருமான் கோவில்களில் இன்று வைகாசி விசாக பெருவிழா கொண்டாட்டம்
திருப்பரங்குன்றம், 30 மே (ஹி.ச.) முருகப்பெருமானின் அவதார திருநாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் திருத்தலங்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பெருமளவில் குவிந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். முருகனின் அறுபடை வீடு
முருகப்பெருமான் கோவில்களில் இன்று வைகாசி விசாக பெருவிழா கொண்டாட்டம்


திருப்பரங்குன்றம், 30 மே (ஹி.ச.)

முருகப்பெருமானின் அவதார திருநாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் திருத்தலங்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பெருமளவில் குவிந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருச்செந்தூர், திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆலயங்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இன்று அதிகாலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.

அரோகரா... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்கள் விண்ணைப் பிளக்க, பக்தர்கள் பலர் காவடி எடுத்தும், பால் குடம் சுமந்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த மே 21-ஆம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.

அன்று முதல் தினமும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை கம்பத்தடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகங்கள் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள், குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் அன்னதானம் ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

வைகாசி விசாக நாளில் முருகனை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், தொழில் வளர்ச்சி பெருகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

Hindusthan Samachar / vidya.b