Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மே (ஹி.ச.)
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற கோவா மற்றும் சிக்கிம் மாநில தின விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். அர்லேக்கர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
ஒரே பாரத், சிறந்த பாரத் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு எண்ணம் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாகக் கூறினார். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் முதலில் நாம் இந்தியர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்றார்.
கோவா மாநிலத்தின் வரலாற்றைப் பற்றி பேசிய ஆளுநர்,
போர்ச்சுகீசிய ஆட்சிக் காலத்தில் பல்வேறு கொடுமைகள் நிகழ்ந்ததாகவும், பல கோயில்கள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அந்த வரலாற்றை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றார்.
தமிழ்நாட்டில் வாழும் கோவா மற்றும் சிக்கிம் மாநில மக்களிடம், அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை அறிந்து மதிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் தங்களது தாய்மொழி மற்றும் கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கோவா சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தபோது அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடைபெற்ற நிலையில், அவற்றை கொங்கனி மொழிக்கு மாற்றியதாக தெரிவித்தார்.
ஆங்கிலம் தெரியாதது அவமானமல்ல,தாய்மொழி தெரியாததுதான் அவமானம். மொழிதான் நமது ஆணிவேர் என்று அவர் கூறினார்.
பீகார் ஆளுநராக பொறுப்பேற்றபோது பிரதமர் மோடி தன்னை பீகாரி என வரவேற்ற சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், எந்த மாநிலத்தில் பொறுப்பேற்றாலும் அந்த மாநில மக்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற உணர்வை அது ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
நாம் இந்தியர்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அந்த மாநில மக்களாகவே நடந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இருந்தால் தமிழராக இருங்கள் என்று ஆளுநர் ஆர்.என். அர்லேக்கர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் 100-ஆவது சுதந்திர ஆண்டில் நாடு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரின் கனவும் ஆகும் என்றும், அந்த இலக்கை அடைய ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ