Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மே (ஹி.ச.)
தமிழக அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகக் கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவற்றை உடனடியாக நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மே மாதத்தின் கடைசி பணிநாளான நேற்று மட்டும் தமிழக அரசுத்துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றதாகவும், இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 12 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் உள்ளதாகவும், அவற்றில் 41.7 சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாகும் நிலையில், சுமார் 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுவதால் கடந்த 20 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அன்புமணி கூறியுள்ளார்.
மேலும், அரசுப் பணிகளுக்கு போதிய அளவில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை எட்டாக்கனியாக மாறியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பி, அரசு வேலைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P