மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக காவிரி விவசாயிகள் கர்நாடக எல்லை நோக்கி பேரணி
ஓசூர், 31 மே (ஹி.ச) கர்நாடக அரசு மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது. தமிழகத்தின் உணவுக் களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்க
மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக காவிரி விவசாயிகள்  கர்நாடக எல்லை நோக்கி பேரணி


ஓசூர், 31 மே (ஹி.ச)

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது.

தமிழகத்தின் உணவுக் களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என விவசாயிகள் முழக்கமிட்டனர்.

தஞ்சாவூரில் இருந்து நேற்று புறப்பட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஓசூர் வழியாக கர்நாடக மாநில எல்லையை நோக்கி பேரணியாக சென்றனர்.

வழிநெடுகிலும் கிராம மக்களும், விவசாய அமைப்புகளும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்தனர். காவிரி எங்கள் உரிமை, மேகதாது அணையை அனுமதிக்க மாட்டோம், டெல்டாவை பாலைவனமாக்காதே போன்ற முழக்கங்களுடன் விவசாயிகள் கருப்புக் கொடிகளை ஏந்திச் சென்றனர்.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, கர்நாடக அரசின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், விவசாயிகளின் இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் இப்பேரணியை முன்னிட்டு தமிழக கர்நாடக எல்லையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b