இந்தியாவின் புதிய CDS ஆக பொறுப்பேற்றார் ராஜா சுப்ரமணி
புதுடெல்லி, 31 மே (ஹி.ச.) இந்திய ராணுவத்தின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான Chief of Defence Staff (CDS) பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். பதவிக்காலம் நிறைவடைந்து ஓய்வு பெற்ற ஜெனரல் அண
ராஜா


புதுடெல்லி, 31 மே (ஹி.ச.)

இந்திய ராணுவத்தின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான Chief of Defence Staff (CDS) பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

பதவிக்காலம் நிறைவடைந்து ஓய்வு பெற்ற ஜெனரல் அணில் சவுகானுக்கு பின் புதிய தலைமை தளபதியாக அவர் பொறுப்பேற்றுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து வழங்கிய முப்படை ராணுவ மரியாதையை ராஜா சுப்ரமணி ஏற்றுக்கொண்டார்.

இதன் மூலம் நாட்டின் மூன்று படைகளுக்கும் ஒருங்கிணைந்த தலைமை ஆலோசகராக அவர் தனது பணியை தொடங்கியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா சுப்ரமணி, இந்திய ராணுவத்தில் நீண்ட கால அனுபவம் கொண்ட அதிகாரி ஆவார்.

National Defence Academy (NDA) மற்றும் Indian Military Academy (IMA)-யில் பயிற்சி பெற்ற அவர், 1985ஆம் ஆண்டு கர்வால் ரைஃபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக இணைந்தார்.

பின்னர் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட முக்கிய எல்லைப் பகுதிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

ராணுவத்தில் தனது சேவைக்காலத்தில் Vice Chief of Army Staff பதவியிலும், Central Command தளபதியாகவும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ராணுவ ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

சீனா மற்றும் பாகிஸ்தான் தொடர்பான பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரியாகவும் அறியப்படுகிறார்.

பொறுப்பேற்ற பிறகு பேசிய ராஜா சுப்ரமணி, இந்திய ஆயுதப்படைகளின் நவீனமயமாக்கல், முப்படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, அமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு, புதிய Theatre Command அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் துறையின் மாற்றங்கள் போன்ற முக்கிய பணிகளை முன்னெடுக்கும் சூழலில், தமிழரான ராஜா சுப்ரமணி இந்தியாவின் புதிய CDS ஆக பொறுப்பேற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P