Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மே (ஹி.ச.)
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல் முறையாக தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டம் இன்று தொடங்கியது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக, 10 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
அதில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் செயல்பாடுகள், வாக்கு நிலவரம் மற்றும் கட்சியின் செயல்திறன் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படவுள்ளது.
மேலும், தேர்தலுக்கு பிறகான அரசியல் சூழ்நிலை, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம், அமைப்பு வலுப்படுத்தல், மாவட்ட அளவிலான வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
வரவிருக்கும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு கட்சியின் நிலைப்பாடு, மக்களிடம் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக ரீதியான மாற்றங்கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிக தலைமையின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த மாவட்டச் செயலர்கள் கூட்டம், கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்களுக்கு முக்கிய திசை நிர்ணயக் கூட்டமாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P