Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மே (ஹி.ச.)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கே. பாலதண்டாயுதம் அவர்களின் 53-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை டி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர்,
ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது ஏற்புடையதல்ல என்று கூறினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் நிலையில், அதன் அதிகார எல்லைகளை மீறி ஆளுநர்கள் செயல்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும், அது சட்டத்தின் ஆட்சியை பாதிக்கும் என்றும் விமர்சித்தார்.
மேலும், தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சார அடையாளங்களை ஆளுநர் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவற்றை வேறு திசைக்கு திருப்ப முயல்வதை காலமும் ஏற்காது, சரித்திரமும் மன்னிக்காது என்றும் தெரிவித்தார்.
“வள்ளுவரை வலதுசாரி அரசியலின் பக்கம் திருப்ப ஆளுநர் முயற்சிக்கக் கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
குதிரை பேரம் எனப்படும் அறமற்ற அரசியலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அதற்கு எந்த வகையிலும் உடன்பாடு இல்லை என்றும் மு. வீரபாண்டியன் கூறினார்.
தமிழக அரசை குறித்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளில் கால அவகாசம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரத்தையும் அவர் விமர்சித்தார். இதற்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும், எதிர்ப்பு பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அமலாக்கத்துறை கேரளாவில் நல்ல பாடத்தை கற்றுக்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர்,
கம்யூனிஸ்டுகளின் வீடுகளில் எத்தனை முறை சோதனை நடத்தினாலும் அங்கு கிடைப்பது புத்தகங்கள் மட்டுமே என்று நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam